பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர விண்ணப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
அரசு விடுதிகள்தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ– மாணவிகளுக்காக 38 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ– மாணவிகளுக்காக செயல்பட்டு வரும் 35 விடுதிகளில் 4–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகளும், 3 கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ– மாணவிகளும் சேர தகுதியானவர்கள்.
இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படும். 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பம்விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தது 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. இத்தகைய தகுதி உடைய மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் இருந்தோ, அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்த...பள்ளி விடுதிகளை பொருத்தவரை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் வருகிற 20–ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
அதே போல் கல்லூரி விடுதிகளை பொருத்தவரை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்– காப்பாளினியிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் வருகிற 15.7.17–க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதிகளிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த மாணவ– மாணவிகள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறி உள்ளார்.