பள்ளிப்பட்டு ஊராட்சியில் பெரிய ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி கலெக்டர் ராஜேஷ் ஆய்வு

பள்ளிப்பட்டு ஊராட்சி பெரிய ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணியை கலெக்டர் ராஜேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2017-06-08 23:13 GMT

கடலூர்,

விவசாய நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களின் தேவைக்காகவும், மண்பாண்ட தொழிலுக்கும் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் எடுத்துச்செல்லலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.75 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

இதுவரை மாவட்டத்தில் 160 ஏரிகளில் பணிகள் நடைபெற்று, 1 லட்சம் கன மீட்டர் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளில் 3 ஆயிரத்து 200 பேர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடலூர் வட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணியை மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது பற்றி கலெக்டர் ராஜேஷ் கூறுகையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் வண்டல் மண், மண் மற்றும் களி மண் ஆகியவற்றை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச்சென்று பயன்பெற வேண்டும் என்றார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குர்ஷித்பேகம், சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்