வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவில் தேரோட்டம்

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2017-06-08 23:09 GMT

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு பெருவிழா கடந்த 31–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தினந்தோறும் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. இரவு வெள்ளி, யானை, ரி‌ஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் குதிரை வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், மாலை 5 மணி அளவில் பிச்சாண்டவர் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு தங்க கைலாய வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதற்கிடையே அர்த்தசாம மற்றும் 63 நாயன்மார் வழிபாட்டு அமைப்பு மற்றும் அறக்கட்டளை சார்பில் முருகப்பெருமானின் அறுபடை வீடு என்னும் தலைப்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்

விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு கோவிலில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 7 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் யாத்ரா தானம் நடைபெற்று, சாமி புறப்பாடு நடந்தது. பிறகு ஆலய முன்மண்டபத்தில் வைத்து சாமிக்கு தீபாராதனை நடந்தது.

அதையடுத்து மேள, தாளங்களுடன் மங்கள இசை முழங்க சாமி தேரடி தெருவை வந்தடைந்தது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரர் எழுந்தருளினார். அங்கு தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 8.35 மணிக்கு பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோ‌ஷங்களை எழுப்பியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னாள் பெரியநாயகி அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன் தனித்தனி ரதங்களில் எடுத்து வரப்பட்டனர்.

சிறப்பு பூஜைகள்

தேருக்கு முன்னால் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடியபடி சென்றனர். தேர் ராஜவீதிகள் வழியாக வந்து மதியம் 12.30 மணி அளவில் நிலைக்கு வந்தது. இரவு 7 மணிக்கு தேரில் இருந்து சாமி சிலை இறக்கப்பட்டு தேரடிதெருவில் மண்டகப்படி பூஜை நடந்தது. தொடர்ந்து சாமி சிலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

முன்னதாக பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் நீர்–மோர், அன்னதானம் வழங்கினர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேருக்கு பின்னால் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் சென்றது.

வருகிற 12–ந்தேதி (திங்கட்கிழமை) சண்டேஸ்வரர் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்