தூர்வாரும் பணியை ஏரி சங்கங்கள் காண்டிராக்ட் விடுகின்றன அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
ஏரிகள் தூர்வாரும் பணியை கொடுத்தால் ஏரி சங்கங்கள் அதை தனியாக காண்டிராக்ட் விடுகின்றன என்று அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அசோக் ஆனந்து: ஏரி, குளங்களை தூர்வாரி நிலத்தடி நீரை உயர்த்த மத்திய அரசின் திட்டப்பணிகளுக்கு நபார்டு வங்கி மூலம் பெறப்பட்ட தொகை பொதுப்பணித்துறையால் முறையாக செலவிடப்படுகிறதா? அரசின் கொள்கை முடிவுக்கு மாறாக செலவிடப்படுகிறதா? ஏரி மற்றும் குளம், குட்டைகள் பட்டியல் தரப்படுமா?
அமைச்சர் நமச்சிவாயம்: ஏரிகளை தூர்வார நபார்டு வங்கி மூலம் பெறப்பட்ட தொகை முறையாக செலவிடப்படுகிறது. கொள்கை முடிவுக்கு மாறாக செலவிடப்படவில்லை. 84 ஏரிகளும் நீர்பிடிப்பு பயன்பாட்டில் உள்ளன. அசோக் ஆனந்து: ஏரிகளை தூர்வார ஏரிசங்கம் உள்ளது. இதற்காக அரசாணையும் உள்ளது. ஆனால் இப்போது அவர்களிடம் தராமல் தவறாக பயன் படுத்தப்படுகிறது. 84 ஏரிகள் இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு கொடுத்த பட்டியலில் 4 ஏரிகளை காணவில்லை. ஏரி சங்கங்களிடம் கொடுத்து தூர்வாரும் பணியை செய்ய அரசாணை இருக்கும் போது அப்படி செய்யாமல் விவசாயிகளை புறக்கணிக்கிறீர்கள்.
சப் காண்டிராக்ட் விடுகிறார்கள்
எம்.என்.ஆர்.பாலன்: ஏரி சங்கங்களால் அந்த பணியை செய்ய முடியாது. எனவே டெண்டர் விட்டுதான் பணிகளை செய்யவேண்டும்.
தனவேலு: ஏரி சங்கத்தினை கவர்னர்தான் இயக்குகிறார். முதலில் அவர் பாகூர் ஏரியை பார்வையிட்டு பணியை ஏரி சங்கங்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்களிடம் தூர்வாருவதற்கு தேவையான அடிப்படையான கருவிகள் கூட இல்லை.
அனந்தராமன்: பல ஏரி சங்கங்கள் காலாவதியாகிவிட்டன. அவற்றை புதுப்பித்து பணிகளை தர அதிகார மையம் (கவர்னர்) செயல்படுகிறது. ஆனால் ஏரி சங்கங்கள் தூர்வாரும் பணியை அடுத்தவரிடம் காண்டிராக்ட் கொடுத்து லாபம் பார்க்கிறார்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: ஏரி சங்கங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அவர்களின் பதிவுகளும் காலாவதியாகிவிட்டன. அவர்கள் கணக்கு வழக்குகளையும் தாக்கல் செய்யவில்லை. தூர்வாரும் பணிகளை ஏரி சங்கங்களுக்கு தர கவர்னர் கூறினார். நாமும் அவர்களுக்கு கொடுத்தோம். இதுதொடர்பாக பொதுமக் களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. அவர்கள் நம்மிடம் இருந்து பணிகளை பெற்று வாய்மொழியாக சப்-காண்டிராக்ட் விட்டு உள்ளனர்.
அரசுக்கு லாபம்
சபாநாயகர் வைத்திலிங்கம்: அப்படியானால் அரசே நேரடியாக டெண்டர் விட்டு செய்யுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் வெளிப்படையாக டெண்டர் விட்டு செய்கிறோம். இதனால் ஒவ்வொரு டெண்டரிலும் அரசுக்கு ரூ.6 லட்சம் லாபம் கிடைக்கிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.