சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 5 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்

சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-06-08 22:58 GMT
வில்லியனூர்,

புதுவை மாநிலத்தில் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆறுகளில் மணல் கடத்தப்படும் வழித்தடங்களை கண்டறிந்து, அங்கு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பெரிய பள்ளங்களை தோண்டிப் போட்டனர்.

இதையும் மீறி பல இடங்களில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன், சத்யநாராயணா, புனிதராஜ் மற்றும் போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து உழவாய்க்கால், வில்லியனூர், பத்துக்கண்ணு, கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாட்டு வண்டிகள் பறிமுதல்

அப்போது அந்த வழியாக 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வரப்பட்டது. அந்த மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்து அதில் வந்த 5 பேரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கருணா கரன் (வயது 40), கூடப்பாக்கம் சுப்புலட்சுமி நகர் முருகன் (33), குருமாப்பேட்டை மோகன் (28), மேட்டுப்பாளையம் செந்தில் (37), காந்தி திருநல்லூர் கிருஷ்ணன் (55) என்பதும், இவர்கள் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்