மரக்காணம் ஜமாபந்தி நிறைவு நாளில் 58 பேருக்கு ரூ.6½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

மரக்காணம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில் 58 பேருக்கு ரூ.6½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

Update: 2017-06-08 22:56 GMT
விழுப்புரம்,

மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் சிறுவாடி, பிரம்மதேசம், மரக்காணம் ஆகிய குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். மொத்தம் 1,032 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 58 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 974 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று முன்தினம் வருவாய்த்துறையின் மூலம் விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 4 பேருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 5 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு இலவச தையல் எந்திரமும், 17 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான உத்தரவும், எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு சமைத்து வழங்க 5 பேருக்கு சமையல் உபகரணங்கள், வேளாண் துறையின் சார்பில் 10 பேருக்கு தென்னங்கன்றுகள், 5 பேருக்கு தெளிப்புநீர் பாசன உபகரணங்களும் ஆக மொத்தம் 58 பேருக்கு ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 900 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நில அளவை உதவி இயக்குனர் சண்முகம், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் பார்த்தசாரதி, மரக்காணம் தாசில்தார் சீனுவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜோதிவேல், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்