ஜனாதிபதி தேர்தலில் சிவசேனா சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும் சஞ்சய் ராவுத் எம்.பி. பேட்டி

‘‘ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் சிவசேனா சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-08 22:54 GMT

மும்பை,

‘‘ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் சிவசேனா சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17–ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், ஜனாதிபதி பதவியை கைப்பற்றும் நோக்கத்தில், கூட்டணி கட்சியான சிவசேனாவின் ஆதரவை பெற பாரதீய ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது. சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்களும், 63 எம்.எல்.ஏ.க்களும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. ஜனாதிபதி தேர்தலில் சிவசேனாவின் நிலைப்பாட்டை விளக்கி, நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

சுதந்திரமான நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்போது நாங்கள் சுதந்திரமான நிலைப்பாட்டை எடுப்போம். எங்களுக்கு போதிய கால அவகாசம் இருக்கிறது. இந்து தேசம் என்ற கனவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை தவிர, வேறு யாரும் இந்த பதவிக்கு தகுதிபடைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பயிர்க்கடன் விவகாரத்தில் சிவசேனாவுக்கும், மராட்டிய அரசுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை பா.ஜனதாவால் தீர்க்க முடியவில்லை என்றாலோ அல்லது இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு அவர்களுக்கு எரிச்சலூட்டினாலோ, அதிகாரத்தை துறந்துவிடுங்கள்.

இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில்...

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா நீண்ட நெடிய ஆண்டுகளாக அங்கம் வகித்த போதிலும், கடந்த 2012–ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்து பா.ஜனதாவை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்தியது.

இதேபோல், 2007 ஜனாதிபதி தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத்தை புறக்கணித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதீபா பாட்டீலுக்கு சிவசேனா வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்