சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவு மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் பணி இடைநீக்கம்

சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரை பணிஇடை நீக்கம் செய்து கமிஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-06-08 22:45 GMT
மும்பை,

சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரை பணிஇடை நீக்கம் செய்து கமிஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டுள்ளார்.

ஆதரவாக அறிக்கை

மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உரிமம் பெற்ற 41 நடைபாதை கடைகள் உள்ளன. இதில் 21 பான், பீடி விற்கும் கடைகள் ஆகும். ஆனால் பான், பீடி கடை உரிமத்தை வைத்து 21 உரிமதாரர்களும் துரித உணவுக்கடை, துணிக்கடைகளை சட்டவிரோதமாக நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி இவர்களின் உரிமத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து உரிமதாரர்கள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின் போது மாநகராட்சி உரிமம் வழங்கும் பிரிவின் சீனியர் ஆய்வாளர் மற்றும் 2 ஆய்வாளர்கள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை தாக்கல் செய்தனர். இது மாநகராட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3 அதிகாரிகள் பணி இடைநீக்கம்


இதையடுத்து நடந்த விசாரணையில், மாநகராட்சி உரிமம் வழங்கும் பிரிவின் சீனியர் ஆய்வாளர் உமேஷ் சாந்தாராம், ஆய்வாளர்கள் சங்கர் தினகர், அஜய் கோவிந்த் ஆகியோர் சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புகாரில் சிக்கிய 3 அதிகாரிகளையும் மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்