சோலாப்பூரில் விவசாயி தற்கொலை ‘‘ முதல்–மந்திரி வரும் வரை உடலை தகனம் செய்யகூடாது ’’ உருக்கமான கடிதம் சிக்கியது

சோலாப்பூரில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, ‘‘முதல்–மந்திரி வரும் வரை உடலை தகனம் செய்யகூடாது’’ என்று எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2017-06-08 22:01 GMT

புனே,

சோலாப்பூரில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, ‘‘முதல்–மந்திரி வரும் வரை உடலை தகனம் செய்யகூடாது’’ என்று எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

விவசாயி

சோலாப்பூர் மாவட்டம் கர்மாலாவில் உள்ள பீட்காவ் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனாஜி ஜாதவ் (வயது42). இவர் தனது வயதான பெற்றோர், மனைவி, யோஹிரார், யூவராஜ் என்ற இரண்டு மகன்கள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கர்மாளாவில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து கடன் உதவி பெற்றிருந்தார்.

சோளம் பயிரிட்டிருந்த நிலையில், அவரது செழித்து வளரவில்லை. இதில் அவர் நஷ்டம் அடைந்தார். இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த திகம்பர் என்பவரிடம் தண்ணீர் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார்.

அதில் கிடைத்த சம்பளத்தை கொண்டு குடும்ப செலவையே சமாளிக்க முடியாமல் திணறி வந்தார். இதன் காரணமாக கடந்த பல மாதமாக வங்கி தவணையை செலுத்த வில்லை. வங்கியில் இருந்து பல முறை எச்சரிக்கை கடிதம் வந்தது. மேலும் அவரது நிலம் விரைவில் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வந்தது. இதை பார்த்து அவர் மிகுந்த வேதனை அடைந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அங்குள்ள புளியமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கர்மாளா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனாஜி ஜாதவின் உடலை கைப்பற்றினர். அப்போது சட்டபையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் கூறியிருப்பதாவது:–

விவசாய பயிர்கடன் குறித்து அரசு சீக்கிரமாக ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பி இருந்தேன். விவசாயிகள் வீதியில் இறங்கி போராடியும் அரசு அசையவில்லை. இது வேதனையாக உள்ளது. எனது குடும்பமும் கடனால் கஷ்டம், வேதனை, அவமானப்பட்டு சந்தித்து வருகிறது. இதனால் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இங்கு வரும் வரைக்கும் உடலை இறுதி ஊர்வலமோ எடுத்து செல்லவோ, தகனம் செய்யவோ கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மந்திரி வந்தார்

இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மந்திரி விஜய்தேஷ்முக், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

போலீசார் தனாஜி ஜாதவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், அவரது கடைசி விருப்பத்தின் படி, முதல்–மந்திரி வரும் வரைக்கும் அவரது உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினரும், கிராம மக்களும் தெரிவித்தனர்.

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக் கோரி மாநிலத்தில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, முதல்–மந்திரி வரும் வரை தனது உடலை தகனம் செய்யக் கூடாது என எழுதி வைத்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பாராமதியில் உள்ள போண்ட்பேவாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஹனுமந்த் சிந்தே (வயது48) என்ற விவசாயியும் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்