கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

Update: 2017-06-08 22:15 GMT
கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் காய்கறி, தென்னை, வாழை, திராட்சை, நெல் உள்ளிட்டவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்தவர்களும் இங்கு வந்து விளைபொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனது. இதனால் கம்பம் பகுதியில் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் மிகவும் குறைந்த அளவே விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. இதையடுத்து விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறினர். மேலும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி பப்பாளிக்கு சொட்டுநீர் பாசனத்தை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

காய்கள் அறுவடை

இதற்காக பெரியகுளத்தில் இருந்து பப்பாளி கன்றுகளை விவசாயிகள் வாங்கி வந்து, நடவு செய்கின்றனர். இந்த பப்பாளி 2½ ஆண்டு கால பயிர் ஆகும். கற்றாழை பூச்சி, மாவு பூச்சி, மஞ்சள் பூச்சி போன்றவை தாக்கும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் என்பதால் சொட்டுநீர் பாசனம் போதுமானது. மேலும் நடவு செய்த 6-வது மாதத்தில் பப்பாளி விளைச்சலுக்கு வந்து விடுகிறது.

மேலும் 8-வது மாதத்தில் காய்களை அறுவடை செய்து விடலாம். ஒரு மரத்தில் இருந்து 40 கிலோ வரை காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி காய்கள் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. நல்ல வருமானம் கிடைப்பதால், பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நல்ல வருமானம்

இது குறித்து கம்பம் தோட்டக்கலை உதவி அலுவலர் மோகன்ராஜ் கூறுகையில், பப்பாளி சாகுபடியில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைப்பதால் ஒப்பந்த அடிப்படையில் பல மாவட்டங்களில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணின் தரம் அறிந்து உரமிட்டு பப்பாளியை பயிர் செய்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பப்பாளி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதற்கு கோ2 ரக விதை கிடைக்கிறது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் ஒரு கிலோ விதை ரூ.600-க்கு விற்கப்படுகிறது.

விதைகளுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இந்த விதை அதிகமான மழையும், வெயிலும் இல்லாத காலத்தில் நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 1,200 மரம் நடவு செய்யலாம். நடவு செய்த 8 மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 18 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கும். மகசூல் தரும் வரை ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். இதன் பால் மருந்து, தோல் பதனிடுதல், முக அழகு கிரீம் தயாரிக்க பயன்படுகிறது. பப்பாளி பழம் உணவாகவும், ஜாம் தயாரிக்கவும், மருத்துவ குணம் நிறைந்த உணவாகவும் பயன்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்