கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேர் கைது ஜெலட்டின் குச்சிகள், சாராயம் பறிமுதல்

கொடைக்கானல் அருகே கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஜெலட்டின் குச்சிகள், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-06-08 22:45 GMT
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி கிராமத்தில் கள்ளத்துப்பாக்கியுடன் சிலர் நடமாடுவதாகவும், சாராயம் காய்ச்சுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா மற்றும் போலீசார் வடகவுஞ்சி கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொடியன்காடு என்னுமிடத்தில் கணேசன் தோட்டத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும் தோட்டத்தில் இருந்த 4 பேர் தப்பியோடினர். அதில் 2 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள்,
ஒட்டன்சத்திரம் தாசில்தார்பட்டியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன் (வயது 38), தங்கராஜ் (57) என்றும், அந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து தோட்டத்தில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 2 நாட்டுத்துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்று உடைந்த நிலையில் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். அந்த துப்பாக்கிகள் உரிமம் பெறாமல் கள்ளத்துப்பாக்கிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வெடிக்காத 5 தோட்டாக்கள், வெடித்த நிலையில் 15 தோட்டாக்கள், தோட்டாக்களில் வைக்கும் கரிமருந்து, 7 ஜெலட்டின் குச்சிகள், 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த அதே பகுதியில் மற்றொரு தோட்டத்தில் வசிக்கும் மலைச்சாமி (24) என்பவரையும் பிடித்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், தங்கராஜ், மலைச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருந்ததால் வனவிலங்குகளை வேட்டையாடினரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனையின்போது, போலீசாரை பார்த்ததும் தப்பியோடி தலைமறைவான ராமகிருஷ்ணன், அய்யப்பன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்