கோடை விடுமுறைக்குப்பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன

குமரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப்பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Update: 2017-06-08 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கு ஏப்ரல், மே மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் நேற்று திறந்ததையடுத்து ஏராளமான மாணவ–மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளுக்கு முதன் முதலாகச் செல்லும் குழந்தைகள், வீடுகளில் இருந்து புறப்படும் போது பள்ளிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து அழுது அடம் பிடித்தன. அந்தக் குழந்தைகளை பெற்றோர் சமாதானப்படுத்துவதற்குள் போதும், போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். சில குழந்தைகள் பள்ளிகளின் வகுப்பறைக்குள் சென்ற பிறகும் சில மணி நேரம் வரை அழுகையை விடாமல், ஆசிரியர்களை நிலைகுலையச் செய்தது. நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் மூத்த மாணவிகள், புதிய மாணவிகளை கை கொடுத்து வரவேற்றனர்

போக்குவரத்து நெரிசல்


பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களின் போக்குவரத்தை 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று காண முடிந்தது. மேலும் மாணவ–மாணவிகளை இருசக்கர வாகனங்களில் பெற்றோர் ஏற்றிச்செல்லும் காட்சியையும் கோடை விடுமுறைக்குப்பிறகு காண முடிந்தது. இதனால் வழக்கத்தைவிட காலையிலேயே குமரி மாவட்டத்தில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் சாலைகள் பரபரப்பாக இருந்தன. நாகர்கோவில் நகரிலும் காலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.

பாடப்புத்தகங்கள் வினியோகம்


பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உதவி உபகரணங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை மற்றும் நோட்டுப்புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 1600 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்