பாம்பன் ரோடு பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி பெண் பலி

பாம்பன் ரோடு பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-06-08 23:00 GMT
ராமேசுவரம்,

தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தை சேர்ந்தவர் சேவியர் (வயது 30). இவர் தனது மனைவி பாக்கியசீலி (24) உடன் மோட்டார் சைக்கிளில் மண்டபத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமேசுவரத்தில் பக்தர்களை இறக்கி விட்டு திண்டுக்கல் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த கணவன்-மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து 2 பேரையும் 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியசீலி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேனை ஓட்டிவந்த மதுரை பசும்பொன் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பாண்டி(42) என்பவர் களஞ்சியம் முனியசாமி கோவில் அருகில் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் வேனை பறிமுதல் செய்து பாம்பன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

கோரிக்கை

பாம்பன் ரோடு பாலத்தில் தற்போது ரூ.2 கோடி செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மிகவும் வழுவழுப்பாக இருப்பதால் பிரேக் பிடிப்பதில்லை என வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். புதிய சாலையால் அடிக்கடி விபத்து நடந்துவருகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்