கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் இலவசமாகவும், சலுகை விலையிலும் பயணம் செய்ய பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இன்று முதல் பஸ் பாஸ் வினியோகம்

கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி மாணவ–மாணவிகள் கர்நாடக அரசு பஸ்களில் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சென்று வருவதற்கு வசதியாக ஆண்டுதோறும் சலுகை விலையில் பஸ்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2017-06-08 20:30 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி மாணவ–மாணவிகள் கர்நாடக அரசு பஸ்களில் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சென்று வருவதற்கு வசதியாக ஆண்டுதோறும் சலுகை விலையில் பஸ்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கான பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தை நடப்பு ஆண்டில் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

2017–18–ம் ஆண்டுக்கான இந்த 2 வகையான பஸ்பாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மாணவ–மாணவிகள் தங்கும் இடத்துக்கும், பள்ளிக்கும் இடையே 60 கிலோ மீட்டர் தொலைவு இருந்தால் மட்டுமே இந்த பஸ்பாஸ்களை பயன்படுத்த முடியும்.

இலவச பஸ்பாஸ்களை பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவ–மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்வதுடன், விண்ணப்பங்களுடன் தங்களது சாதி சான்றிதழ் நகல்களையும் இணைத்து பள்ளி நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அத்துடன், செயலாக்க கட்டணம் ரூ.80, விபத்து நிவாரண நிதி மாதம் ஒன்றுக்கு ரூ.5 என 12 மாதங்களுக்கு ரூ.60 ஆகியவற்றையும் செலுத்த வேண்டும். சலுகை விலை பஸ்பாஸ்களை பெற விரும்பும் மாணவ–மாணவிகள் தங்களது பயண தூரங்களுக்கு ஏற்ற கட்டணங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு முறையான பரிசீலனைக்கு பின்னர் மாணவ–மாணவிகளுக்கு இலவச மற்றும் சலுகை விலை பஸ்பாஸ்களை கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் வழங்கும்.

மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்