குடிப்பழக்கத்தை நிறுத்துவது கடினம் நகரங்களில் மதுக்கடைகளை வைக்க அரசாணையில் இருந்து விலக்கு மேல்–சபையில் சித்தராமையா பேச்சு

நகரங்களில் மதுக்கடைகளை வைக்க அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மேல்–சபையில் சித்தராமையா கூறினார்.

Update: 2017-06-08 21:30 GMT

பெங்களூரு,

நகரங்களில் மதுக்கடைகளை வைக்க அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மேல்–சபையில் சித்தராமையா கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

கர்நாடக மேல்–சபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா எழுந்து பேசுகையில், “நகர பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்ற மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நகர பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை தக்க வைத்துக்கொள்ள இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது“ என்றார். அப்போது முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை மாநில அரசு மீறாது. இந்த தீர்ப்பை பின்பற்றும்படி நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மது குடிப்பதை நிறுத்த முடியாது

20 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 220 மீட்டர் எல்லைக்குள்ளும், 20 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 500 மீட்டர் எல்லைக்குள் மதுபான கடைகளை வைத்துக்கொள்ள மாநில அரசு, மாநில–தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சாலைகளை உள்ளாட்சி அமைப்புகள் தான் நிர்வகிக்கின்றன. அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மது குடிப்பவர்களை ஆதரிப்பதும் இல்லை, எதிர்ப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். மது குடித்து பழகியவர்கள், அதை பழக்கத்தை நிறுத்துவது கடினம். அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பது நல்லது. இவற்றை ஆலோசித்து அரசு முடிவு எடுத்துள்ளது. மதுபான விற்பனையை முழுவதுமாக தடை செய்தால் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்படும் என்பது பொய்.

அரசுக்கு வருவாய் குறையும்

சாராய விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் ‘விஸ்கி‘ குடிக்கிறார்கள். சாராயம் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க இதுவரை முடியவில்லை. மதுபான விற்பனைக்கு தடை விதித்தால் அரசுக்கு வருவாய் குறையும்.

மேலும் இதையே நம்பி தொழில் செய்யும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை பாதிக்கும். இதையெல்லாம் ஆலோசித்த பிறகே அரசு, நகரங்களில் உள்ள மதுபான கடைகளை தக்க வைக்க இந்த முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

பா.ஜனதா வெளிநடப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா உறுப்பினர்கள், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மதுபானங்களால் ஏழை மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, “முதலில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மதுபானத்திற்கு தடை விதிக்கட்டும்“ என்றார்.

கர்நாடக அரசு மதுபான உரிமையாளர்களின் நெருக்கடிக்கு பணிந்துவிட்டதாக ஈசுவரப்பா கூறினார். இதற்கு ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசினர். இதனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பா.ஜனதா உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்