விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருடியவர் கைது

அதியமான்கோட்டை அருகே விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கார், மின் மோட்டார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-06-08 22:15 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள பண்ணைக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ். விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் வைத்திருந்த மின் மோட்டார் திருட்டு போனது. இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தடங்கம் மேம்பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. இதனை போலீசார் நிறுத்தினர். காரில் வந்தவர்களில் ஒருவர் இறங்கி தப்பி ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றொருவரை பிடித்து காரில் சோதனை செய்தனர். அப்போது உள்ளே மின் மோட்டார் இருப்பது தெரியவந்தது.

ஒருவர் கைது

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அவர் மேட்டூரை சேர்ந்த பரமசிவம் (வயது 30) என்பதும், தப்பி ஓடியவர் மேட்டூர் சின்னகானூரை சேர்ந்த சிவக்குமார்(40) என்பதும், மாதேசின் விவசாய கிணற்றில் மின் மோட்டாரை திருடி விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தர்மபுரி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய கிணறுகளில் மின் மோட்டார்கள் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய கார், மின்மோட்டார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்