அரசு காப்பகத்தில் தங்க அனுமதி மறுப்பு: 2–வது நாளாக மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு காப்பகத்தில் ஆதரவற்ற மாணவிகள் அனுமதிக்கப்படாததால் தொடர்ந்து 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2017-06-08 22:15 GMT

மதுரை,

மதுரை காந்தி மியூசியம் அருகே சமூக பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இந்த காப்பகத்தில் தங்கிப்படித்து வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு 147 மாணவிகள் தங்கியிருந்தனர்.

இதில் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து 35 மாணவிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறந்தன. இதனால் சொந்த ஊருக்கு சென்றிருந்த சுமார் 80 மாணவிகள் பெட்டி, படுக்கைகளுடன் காப்பகத்திற்கு வந்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

ஆனால் காப்பகத்தின் கண்காணிப்பாளர் ரேணுகா, இந்த காப்பகத்தில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி 35 மாணவிகள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 35 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். எனவே வேறு காப்பகத்துக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுங்கள் என திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்த மாணவிகள் நடுரோட்டிலேயே நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். ஆனால், கலெக்டர் வீரராகராவ் ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால், உங்களது சொந்த ஊரில் உள்ள பள்ளியில் சேர்க்கை பெற்று தருகிறேன்.

உள்ளிருப்பு போராட்டம்

அங்கு காப்பகம் இருந்தால் தங்குவதற்கு அனுமதி அளிக்கிறேன் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் காப்பகத்தில் தங்க வந்த மாணவிகள் தங்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் காப்பகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2–வது நாளாக நேற்றும் நீடித்தது.

இதுகுறித்து மதுரை வக்கீல் முத்துக்குமார், தமிழக அரசின் தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மாநில மனித உரிமை ஆணையம், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, மதுரையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியிருந்த சுமார் 80 மாணவிகள் திடீரென்று முன் அறிவிப்பில்லாமல் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 நாட்களாக காப்பகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதரவற்றவர்களுக்காகத்தான் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

நடவடிக்கை

ஆனால், அவர்களை வெளியேற்றி உள்ளதால் அவர்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பையும் தொடர முடியாமல் உள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துகிறோம் என்ற போர்வையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர். எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் பொதுநலன் கருதி இந்த வி‌ஷயத்தில் உடனடியாக தலையிட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்