நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்: கேரளாவை சேர்ந்த இரும்பு வியாபாரி பலி

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளாவை சேர்ந்த இரும்பு வியாபாரி பலியானார். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-06-08 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மன்னார்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 41). இரும்பு வியாபாரி. இவரும் பாலக்காட்டைச் சேர்ந்த உமர் (40) என்பவரும் வியாபாரம் சம்பந்தமாக கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் காரில் புறப்பட்டனர்.
காரை சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த பாலாஜி (30) என்பவர் ஓட்டிச்சென்றார்.

அந்த கார் நேற்று காலை 6 மணி அளவில் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மோட்டூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார், முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த முகமது பஷீர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

2 பேர் படுகாயம்

மேலும் உமர், டிரைவர் பாலாஜி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த உமர், டிரைவர் பாலாஜி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

விபத்தில் பலியான முகமது பஷீரின் உடல் காருக்குள் சிக்கி கொண்டதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடப்பாரை மூலமாக காரின் கதவை உடைத்து அவரது உடலை போலீசார் மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்