பாளை. அருகே கொலை செய்யப்பட்ட விவசாயி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பாளையங்கோட்டை அருகே உள்ள அவினாப்பேரியை சேர்ந்தவர் நிறைகுளத்து அய்யனார் (வயது 55), விவசாயி. இவருடைய நண்பர் மாலையப்பன் (40).

Update: 2017-06-08 19:45 GMT

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே உள்ள அவினாப்பேரியை சேர்ந்தவர் நிறைகுளத்து அய்யனார் (வயது 55), விவசாயி. இவருடைய நண்பர் மாலையப்பன் (40). இவர்கள் இருவரும் கடந்த 6–ந்தேதி இரவு பாளையங்கோட்டையை அடுத்துள்ள பர்கிட்மாநகரம் அருகே மர்மகும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் நிறைகுளத்து அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மாலையப்பன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை தொடர்பாக பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம், அவருடைய நண்பர் சின்னத்துரை ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று நாங்கள் பர்கிட்மாநகரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவினாப்பேரியை சேர்ந்த நிறைகுளத்து அய்யனாரும், மாலையப்பனும் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மது குடித்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இங்கு நின்று ஏன் மது குடிக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் எங்களை பார்த்து அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசி மிரட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள், அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாங்கள் ஒரு திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தபோது போலீசார் எங்களை மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர் என்று கூறி உள்ளனர்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட நிறைகுளத்து அய்யனாரின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு நிறைகுளத்து அய்யனாரின் உடலை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்