பாணாவரம் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை போலீஸ் விசாரணை

பாணாவரம் அருகே பிரபல ரவுடி தலைதுண்டித்து படுகொலைசெய்யப்பட்டார். அவரை கொலைசெய்தவர்கள் யார்? என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-06-08 23:15 GMT
பாணாவரம்,

வேலூர் மாவட்டம் பாணாவரத்தை அடுத்த மகேந்திரவாடி ரெயில்நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்தில் நேற்று சிலர் ஆடுமேய்க்க சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. மேலும் அங்கு ஒரு இடத்தில் 5-க்கும் மேற்பட்ட நாய்கள் ஏதோ ஒரு பொருளை கவ்வி இழுத்துக்கொண்டிருந்தன. இதைபார்த்த அவர்கள் அருகில் சென்றபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

உடனே அவர்கள் இதுபற்றி பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு குற்றாலிங்கம், பாணாவரம் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபரின் உடல் அழுகியநிலையில் இருந்தது. எனவே அவர் கொலைசெய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பிரபல ரவுடி

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் மகேந்திரவாடியை அடுத்த வெடல்வாடி கிராமத்தை சேர்ந்த கவுரி என்கிற நந்தினி (30) என்ற பெண் தனது உறவினர்களுடன் அங்குவந்தார். அவர் கொலைசெய்யப்பட்டு கிடந்தவரின் உடலை பார்த்து கதறி அழத்தொடங்கினார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தவர் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பேய் என்கிற செந்தில் (வயது 34) என்பது தெரியவந்தது. இவர் மீது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதால் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து வெடல்வாடி கிராமத்திற்கு வந்துள்ளார்.

கள்ளக்காதல்

அப்போது அதே கிராமத்தில் கணவனை பிரிந்து வாழும் கவுரி என்கிற நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதைத்தொடர்ந்து பேய் என்கிற செந்தில், கவுரி என்கிற நந்தினியை சில வருடங்களுக்கு முன்புதிருமணம் செய்துகொண்டுள்ளார். நந்தினிக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நந்தினியை திருமணம் செய்துகொண்ட செந்தில் அரக்கோணம், நெமிலி பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அரக்கோணம், நெமிலி, பாணாவரம், சோளிங்கர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. திருட்டு மற்றும் வழிப்பறியில் கிடைக்கும் பணத்தை வைத்து செந்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் தினமும் மாலை நேரத்தில் மலையடிவாரத்திற்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்து வந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

கடந்த 6-ந் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியேசென்ற அவர் பின்னர் வீடுதிரும்பவில்லை. இந்த நிலையில் மலையடிவாரத்தில் அவர் தலைதுண்டித்து கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் வேலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை சுற்றிசுற்றி வந்தது. பின்னர் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. தடயவியல் நிபுணர் விஜய் தடயங்களை சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து செந்தில் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கூத்தம்பாக்கம் கிராமநிர்வாக அலுவலர் காளிதாஸ் பாணாவரம் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து செந்திலை தலைதுண்டித்து கொலைசெய்தவர்கள் யார்? எதற்காக கொலைசெய்தார்கள் என்பது குறித்தும், அவருடன் கடைசியாக போனில் பேசியவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கவுரி என்கிற நந்தினியிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

ரத்தத்தை தேடிய போலீஸ்

ரவுடி பேய் என்கிற செந்தில் தலை துண்டித்து கொலைசெய்யப்பட்டுள்ளதால் எங்காவது ரத்தம் படிந்திருக்கிறதா என்று போலீசார் தேடினர். ஆனால் அந்தப்பகுதியில் எங்கும் ரத்தம் படியவில்லை. இதனால் வேறு எங்காவது வைத்து கொலைசெய்து பிணத்தை மலையடிவாரத்தில் வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதினர். மேலும் ரத்தம் படிந்திருந்தாலும் மழைபெய்துள்ளதால் மழைநீரில் ரத்தம் கரைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்