ஆம்பூர் அருகே சிறுத்தைபுலி குட்டியுடன் நடமாட்டம் பொதுமக்கள் தனியாக காட்டுக்குள் செல்ல வேண்டாம்

ஆம்பூர் அருகே சிறுத்தைபுலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தனியாக காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2017-06-08 22:00 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உமராபாத்தை அடுத்த பாலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி கெம்பசமுத்திரம் காப்புகாடுகள் உள்ளது. இப்பகுதியில் யானை, மான், கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த காப்புகாட்டை ஒட்டியுள்ள பகுதியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை அந்த வழியாக பொதுமக்கள் சென்றபோது காட்டில் இருந்து வித்தியாசமான உறுமல் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சற்று உள்பகுதிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு சிறுத்தைபுலி, தனது குட்டியுடன் நடமாடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ஊருக்குள் சென்று ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியில் சிறுத்தைபுலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. இதனால் காட்டுப்பகுதியில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனியாக செல்ல வேண்டாம்

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

சிறுத்தைபுலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்