காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை விழா

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2017-06-08 22:30 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதன் முக்கிய விழாவான கருடசேவை விழா நேற்று நடந்தது. 

இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் வரதராஜபெருமாள் உற்சவர் மலர் அலங்காரத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் ஓத, கற்பூர தீபாராதனை காட்ட கருட வாகனத்தில் எழுந்தருளினார். அதிகாலை 5 மணியளவில் கோபுரவாசலை பெருமாள் வந்தடைந்தார். 

அப்போது கோபுரத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது. அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    பின்னர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் காஞ்சீபுரத்தின் முக்கிய வீதிகளான டி.கே.நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம் மற்றும் 4 ராஜ வீதிகளில் வீதியுலா வந்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் காட்டி நாட்டு சர்க்கரையை தட்டில் வைத்து பெருமாளை தரிசனம் செய்தனர். 

உள்ளூர் விடுமுறை

கருடசேவையையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருகிற 12–ந்தேதி தேர்திருவிழா நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையரும் நிர்வாக அறங்காவலருமான விஜயன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெய்சங்கர், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்