மத்திய அரசை கண்டித்து ஒரு வார காலம் பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்

‘மத்திய அரசை கண்டித்து வருகிற 29-ந் தேதி முதல் ஒரு வார காலம் பிரசார இயக்கம் நடத்தப்படும்’ என்று கோவையில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-06-08 22:15 GMT
கோவை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் கோவை ஜீவா இல்லத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. 2-ம் நாளான நேற்று கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:-

பிரதமர் நரேந்திர மோடி அரசில் அதிகரித்து வரும் வகுப்புவாத செயல்களையும், தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், வறட்சி, வேலையின்மை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி முடிய தமிழ்நாட்டில் ஒருவார காலம் பிரசார இயக்கம் நடத்தப்படும். இந்த பிரசார இயக்கம் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, தேனி, ஆகிய ஆறு மையங்களில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து அடுத்த மாதம் 5-ந் தேதியன்று திருச்சியில் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

பா.ஜனதா அரசு கடைப்பிடித்து வருகிற புதிய பொருளாதார கொள்கைகளால் நாட்டின் விவசாயமும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும் நசிந்து அழிந்து வருகின்றன. பல்வேறு துறைகளில் பா.ஜனதா அரசு தோல்வி கண்டுவருகிறது. இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக வழக்கமான தங்களது வகுப்புவாத முழக்கமான “இந்துத்துவா” என்ற மதவெறிக் கருத்தை முன்வைக்கிறது. மொத்தத்தில் நாடு பாசிச தன்மைவாய்ந்த திசையை நோக்கி இழுக்கப்பட்டு வருகிறது. தலித்துகளும், இஸ்லாமியர்களும் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டம், வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் நிலை நிறுத்தி, இந்திய ஒற்றுமையை காப்பாற்ற இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற தன்மை கொண்ட போராட்ட அணியை அமைக்கப் போராடுவது என மாநிலக்குழு தீர்மானிக்கிறது.

பூரண மதுவிலக்கு

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமலாக்குமாறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடி வருவதை தொடர்ந்து படிப்படியான மதுவிலக்கை அமல்படுத்தும் கொள்கையை அரசு ஏற்றுக் கொண்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துதலில் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். மதுக்கொள்கையால் விளைந்துள்ள தீமைகளை கருத்தில் கொண்டு பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசின் பிறத்துறைகளில் உள்ள காலிப்பணி இடங்களில் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவக்கல்வி இடங்களுக்கு விலக்குப் பெறுவதற்காக, தமிழக சட்டமன்றத்தில் 2 சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்தப் போக்கு, மாநில அரசுகளின் உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் எதிரானது. எனவே, இந்த சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவேண்டும். அதை மாநில அரசும் வலியுறுத்த வேண்டும்.

இந்தி திணிப்பு

சென்னை ஐ.ஐ.டி.யில், மாணவர் சூரஜ், மதவெறி கொண்ட மாணவர்களால் கொடுமையான முறையில் தாக்கப்பட்டதை மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களை மத வெறி ஆக்கிரமிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி, அதற்கு முறையான தீர்வு காண ஒருங்கிணைய வேண்டும் என்று தமிழக மக்களை இந்த மாநில குழு அழைக்கிறது.

கல்விக் கூடங்களில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற மொழி திணிப்பையும், இந்தியில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் தான் மத்திய அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு, என்ற அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையையும், தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதையும் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்
திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசு பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக போராடுகிறவர்களுக்கு அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை தமிழக அரசு, திரும்ப பெற்று. அவர்கள் 4 பேரையும் விடுதலைசெய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின் தலைமையில் இயங்கி வந்த உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை அ.தி.மு.க அரசு முடக்கியுள்ளது. அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோத செயல்களை கண்டிப்பதுடன் காலதாமதமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்