நீலகிரி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் போக்குவரத்துதுறை ஆணையர் தலைமையில் நடந்தது.

Update: 2017-06-08 22:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்பு மற்றும் வாகன விபத்துகளை தடுப்பு எப்படி? என்பது குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சங்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா பேசும்போது கூறியதாவது:-

அடிக்கடி விபத்து

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால், வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. ஆகவே இதனை தடுப்பது எப்படி? என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விபத்துக்கு காரணம் சமவெளியில் இருந்து மலைப்பகுதிக்கு வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுனர்களுக்கு, மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குவது குறித்த சரியான முன் அனுபவம் இல்லாததே ஆகும்.

எனவே, சாலைகளின் முக்கிய இடங்களில் மலைப்பகுதி வளைவுகளில் எந்த கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், பிரேக் அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும், விபத்தை தடுக்க கூடிய வகையில், வாகனங்களை இயக்குவது குறித்த முழு விவரங்களை தகவல் பலகையில் குறிப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தலைக்கவசம்

மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மலைப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய போலீசார் அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுபதி ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், போக்குவரத்து துறை ஆய்வாளர் சக்திகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்