சேலம் திருமலைகிரி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

சேலம் திருமலைகிரி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பூசாரி தீக் குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-08 00:08 GMT
சூரமங்கலம்,

சேலம் திருமலைகிரி அருகே நாகியம்பட்டி கிராமத்தின் பஸ்நிறுத்தம் அருகே மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜூன் 1-ந் தேதிக்குள் இந்த கடையை அகற்றிவிடுவதாக பொதுமக் களிடம் அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தனர்.

முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ஆனால் இதுவரை அந்த மதுக்கடை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாகியம்பட்டி கிராம பொதுமக்கள் நேற்று காலை மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில், பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டனர்.

சமையல் செய்தனர்

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மதுக்கடையை அகற்றும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு செல்லமாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே போராட்டத்தில் ஒரு பகுதியாக, மரணமடைந்தவரின் உடலை நாற்காலில் வைத்து நடித்து காட்டினர்.

அப்போது பெண்கள் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் அடுப்பு கூட்டி மண்பானையில் சாதம் வைத்து சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பிகளை பொதுமக்கள் அகற்றினர். இதை போலீசார் தடுத்தபோது தடுப்பு கம்பி விழுந்து ஒருவர் காயமடைந்தார். மேலும் நாகியம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் உள்பட சிலர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை.

இந்தநிலையில் பூசாரி தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் மேற்கு தாசில்தார் பெலிக்ஸ் ராஜா அங்கு விரைந்து வந்தார்.

பதற்றம்

பின்னர் அவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த டாஸ்மாக் கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் நாளை(இன்று) டாஸ்மாக் அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார். இதையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் பதற்றமும் நீடித்தது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்