ஈரோடு மாவட்டத்தில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரபாகர் தகவல்

Update: 2017-06-07 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

இளைஞர் விருது

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது மற்றும் ரூ.50 ஆயிரம், பாராட்டு சான்றிதழ், பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. அதன்படி 2017–ம் ஆண்டுக்கான முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.8.2017 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதியுடன் 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் மாதம் 31–ந் தேதி அன்று 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கடந்த நிதி ஆண்டில் (2015–2016) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

இணையதளம்

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை வருகிற 15–ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்