தீயில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் ‘ஜா கட்டர்’ எந்திரத்தின் மீது இடிபாடுகள் விழுந்ததால் பரபரப்பு
தீயில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ‘ஜா கட்டர்’ எந்திரத்தின் மீது இடிபாடுகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் துணிக்கடை இடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிடம் இடிக்கும் பணியில் ‘ஜா கட்டர்’ எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
6-வது நாளாக நேற்றும் கட்டிட இடிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் மாலை 5.40 மணி அளவில் கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்த, ‘லிப்ட் ரூம்’ திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் கடுமையான தூசி மண்டலமாக காட்சியளித்தது. மேலும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகே உள்ள கட்டிடங்களிலும் லேசான அதிர்வு உணரப்பட்டது.
ஒரு மணி நேரம் பணி பாதிப்பு
அதே சமயத்தில் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ‘ஜா கட்டர்’ எந்திரத்தின் மீதும் இடிபாடுகள் விழுந்தது. இதனால் அந்த எந்திரத்தின் ‘ஹைட்ராலிக்’ குழாய்களில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, கட்டிடம் இடிக்கும் பணி சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. ‘ஹைட்ராலிக்’ குழாய்களை சரி செய்த பின்னர் மீண்டும் இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இதற்கிடையில் ஜா கட்டர் எந்திரங்கள் பயன்படுத்தியதால் தான் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இக்கட்டிடங்களை புனரமைத்து தரும் பணியை அரசு செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.