குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-07 22:15 GMT

தேவதானப்பட்டி,

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி தெற்கு காலனி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பக்கத்து ஊர்களுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு தெற்கு காலனியை சேர்ந்தவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அந்த ஊர்களிலும் சரிவர அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தெற்கு காலனி பகுதி மக்கள் நேற்று வைகை அணை சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொது தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த தேவதானப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்