கோமுகி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி

கோமுகி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

Update: 2017-06-07 22:15 GMT

கச்சிராயப்பாளையம்

கோமுகி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

வண்டல் மண்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு விவசாய நிலங்களை செம்மைப்படுத்துவதற்கு ஏதுவாக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு அதிலுள்ள வண்டல் மண்ணை எடுத்து இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகவேல் வரவேற்றார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு வண்டல் மண் எடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்