இளம்பெண் அடித்துக் கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்

பட்டுக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம் பெண்ணை உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-06-07 22:15 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி செல்வமணி (வயது 30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவி செல்வமணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு செல்லத்துரை தகராறு செய்துள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செல்லத்துரை வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையால் மனைவி செல்வமணியை சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்லத்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்