100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக தருவதாக கூறி சாலை மறியல்

100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக தருவதாக கூறி வாழைக்குழியில் கிராமமக்கள் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-07 22:15 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வாழைக்குழி கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.38 மட்டும் சம்பளமாக தரப்பட்டுள்ளது. இதனையடுத்து குறைவாக சம்பளம் வழங்கிய நிர்வாகத்தை கண்டித்து அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து கிராமமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள், நீங்கள் செய்யும் பணியினை கணக்கில் கொண்டு தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இனி அதிகம் வேலை செய்தால் அதற்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும் என கிராமமக்களிடம் கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்