குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டியில் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-06-07 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி கீழவிதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 20 நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் அழைந்தும் குடிநீர் கிடைக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் நேற்று புதுக்கோட்டை- திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் குடிநீர் வசதிகேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருகோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சரிசெய்து, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்