தொழில் போட்டி காரணமாக பால் முகவர் அடித்துக்கொலை முன்னாள் ஊழியர் கைது

கரூரில், வீடுகளுக்கு பால் பாக்கெட் வினியோகிப்பதில் ஏற்பட்ட தகராறில் பால் முகவரை அடித்து கொலை செய்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-07 23:15 GMT
கரூர்,

கரூர் வடக்கு காந்திபுரம் ஜி.ஆர். நகர் 7-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது46). இவர் தனியார் பால் நிறுவனத்தின் முகவராக இருந்து வந்தார். இவரிடம் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்த சின்னசாமி(50) என்பவர் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்து வீடுகளுக்கு பால் வினியோகம் செய்து வந்தார்.

இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கும், சின்னசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சின்னசாமியை வேலையை விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் நீக்கினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் முகவராக இருக்கும் பால் பாக்கெட் நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளை பெற்று சின்னசாமி, வியாபாரம் செய்ய தொடங்கினார்.

தொழில் போட்டி

ரவிச்சந்திரன் வினியோகிக்கும் இடங்களுக்கும், வீடுகளுக்கும் சென்று சின்னசாமி பால் பாக்கெட் வினியோகிக்க தொடங்கினார். இதனால் தொழிலில் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. தான் வினியோகிக்கும் இடத்திற்கு பால் பாக்கெட்டுகளை வினியோகிக்கக் கூடாது என சின்னசாமியை பார்த்து ரவிச்சந்திரன் எச்சரித்தார்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் சமாதானம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவரையும் அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் சண்டையிட்டு தகராறு செய்யக்கூடாது என இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டனர். மேலும் ரவிச்சந்திரன் பால் பாக்கெட் வினியோகிக்கும் இடத்தில், சின்னசாமி வினியோகிக்க கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கரூர் காந்திகிராமம் அருகே அழகப்பா நகர் பிரிவில் கரூர்-திருச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சின்னசாமி பால்பாக்கெட் வினியோகம் செய்து கொண்டிருந்தார்.

அடித்துக்கொலை

ரவிச்சந்திரன் வினி யோகிக்கும் இடங்களுக்கு சென்று சின்னசாமி பால் பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இதனை கண்ட ரவிச்சந்திரன், சின்னசாமியிடம் தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ரவிச்சந்திரன், சின்னசாமியின் கை விரல்களை பிடித்து கடித்தார். அப்போது ரவிச்சந்திரனை பிடித்து சின்னசாமி அடித்து தள்ளி விட்டார். இதில் கீழே விழுந்த ரவிச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் இரவு நேர ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் விரைந்து வந்து ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ஊழியரான சின்னசாமியை கைது செய்தனர். இறந்த ரவிச்சந்திரனுக்கு கமலவேணி என்ற மனைவியும், தீபிகா, சவுமியா ஆகிய 2 மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். பால் முகவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்