குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தாராபுரத்தில், குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்;

Update: 2017-06-07 22:15 GMT

தாராபுரம்

தாராபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகை

தாராபுரம் அருகே உள்ள சென்னாக்கல்பாளையம் கிராமத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் தாராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:–

தளவாய்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னாக்கல்பாளையத்தில் 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுக்கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோல் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தோம்.

வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக எங்களுடைய கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் ஏற்கனவே கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் கூடுதலாக குழாய்களை பொருத்தி, மின்மோட்டார் வைத்து குடிநீர் வழங்கப்பட்டது. 2 நாட்களுக்கு பிறகு அந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை. தற்போது குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள்.

பேச்சு வார்த்தை

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து தரவேண்டும் அதுவரை எங்கள் கிராமத்திற்கு லாரிகள் மூலமாக தினந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கைவைத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்று கூறினார்கள்.

தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்