கோடநாடு கொலை–கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி சயன் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
கோடநாடு கொலை–கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சயன் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெறுகிறார்
கோவை,
கோடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான சயன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சயன் கைதுநீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் அங்கு நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான சயன், கடந்த ஏப்ரல் மாதம் 29–ந்தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகே கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயனின் மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோர் பலியானார்கள். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சயன் உடல் நலம் தேறியதை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து கோத்தகிரிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோடநாடு பங்களாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு கொள்ளை நடைபெற்றது எப்படி? என்பது குறித்து சயன் நடித்து காண்பித்தார். இதனை வீடியோவில் பதிவு செய்த போலீசார், பின்னர் சயனை கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வருகிற 20–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
கைதிகளுக்கான வார்டில் அனுமதிஇதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சயனை கோவை சிறைக்கு கொண்டு வந்தனர். கோவை சிறையில் சயனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். விபத்தில் சயனுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாகாததால் தனக்கு வலி இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து சயனை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சயன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வார்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறையில் மீண்டும் அடையாள அணிவகுப்புஇந்த வழக்கு தொடர்பாக கோவை சிறையில் ஏற்கனவே அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொள்ளை கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த காவலாளி கிருஷ்ணபகதூர் அவர்களை அடையாளம் காண்பித்தார். தற்போது இந்த வழக்கில் கைதான சயன் உள்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதால், சயனுக்கு சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் ஒரு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.