ஆச்சிபட்டி– திப்பம்பட்டி புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்

ஆச்சிபட்டி– திப்பம்பட்டி புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் தகவல்

Update: 2017-06-07 22:15 GMT

பொள்ளாச்சி,

ஆச்சிபட்டி– திப்பம்பட்டி புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டியில் இருந்து திப்பம்பட்டி வரையிலான 15.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோட்டை விரிவாக்கம் செய்து புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தற்போது 40 சதவீதம் முடிந்துள்ளது.

ரோடு விரிவாக்க பணிக்காக இன்னும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டியது உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தாசில்தார் செல்வி தலைமை தாங்கினார்.

நெரிசல் குறையும்

இதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்து பேசியதாவது:–

ஆச்சிபட்டி முதல் திப்பம்பட்டி வரை ரோடு விரிவாக்க பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த பணிக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இந்த பணி நிறைவு பெற்றால் கோவையில் இருந்து பழனிக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி விரைந்து செல்ல முடி யும். புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் செல்வதால் பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதோடு விபத்துகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

அப்போது, திப்பம்பட்டி, குள்ளக்காபாளையம், ஆலாம்பாளையம் பிரிவு, அனுப்பர்பாளையம், கரப்பாடி பிரிவு, தொப்பம்பட்டி பகுதிகளை சேர்ந்த நில உரிமையாளர்கள் பேசும் போது, ரோடு விரிவாக்க பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களிடம் கையகப்படுத்தும் இடத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நிலத்தை கொடுத்து விட்டு பணத்திற்காக அலைய முடியாது என்றனர்.

அதற்கு பதில் அளித்து கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில், உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் பத்மா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்