தாம்பரம் அருகே ரூ.500, 2,000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மாற்றிய வாலிபர் கைது

ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை வீட்டில் கலர் ஜெராக்ஸ் எடுத்து மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உள்ள கடைகளில் மாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-07 22:00 GMT
தாம்பரம், 

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 27). இவர், சேலையூர் காமராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சேலையூர் போலீசார், சந்தேகத்தின் பேரில் முருகேசனை பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் இருந்த மணிபர்சை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் இருந்தன. அவை போலி ரூபாய் நோட்டுகள் போன்று இருந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், முருகேசன் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

கலர் ஜெராக்ஸ்

அங்கு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் கலர் ஜெராக்ஸ் எந்திரம் இருந்தது. அதன் மூலம் முருகேசன், ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அவற்றை கடைகளில் மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் கலர் ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வீட்டில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்து இருந்த ரூ.22 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். 

அப்போது போலீசாரிடம் அவர் கூறும்போது, ‘‘வீட்டில் தயாரிக்கப்படும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கடைகளில் மாற்றியதாக’’ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்