செங்கல் சூளை உரிமையாளர் குத்திக்கொலை
காஞ்சீபுரம் அருகே செல்போனுக்காக செங்கல் சூளை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் வரதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). விவசாயியான இவர் செங்கல் சூளை நடத்தி வந்தார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் வரதாபுரத்தில் உள்ள அவரது வயலில் படுத்து இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பன்னீர்செல்வத்தை கத்தியால் மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மாகரல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
3 பேர் கைது
இது குறித்து காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், மாகரல் சப்–இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (20), காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த நிலவரசன் (21), ஜெயபிரகாஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் செல்போனுக்காக இந்த கொலையை செய்ததாகவும், செல்போனை எடுத்து விட்டு பின்னர் அங்கு போட்டு விட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.