வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-06-07 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பூவலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பின்னர் அவர்கள் கலெக்டர் சுந்தரவல்லியிடம் இது தொடர்பான புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பூவலை கிராமத்தில் 102 குடும்பங்களை சேர்ந்த 300–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீடு கட்டி வசிப்பதற்கு மனை இல்லாமல்  கஷ்டப்பட்டு வருகிறோம்.

அரசு நிலம்

 எங்கள் பகுதியில் 2 ஹெக்டேர் 66 சென்ட் அரசு நிலம் உள்ளது. வீடு கட்டி வசிக்க நிலம் இல்லாமல் கஷ்டப்படும்  எங்களுக்கு மேற்படி அரசு நிலத்தை  வீட்டு மனையாக அமைத்து, பட்டா வழங்கி  உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்