போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்ற 5 பேர் கைது

போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்ற 5 பேர் கைது கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்

Update: 2017-06-07 22:45 GMT

குன்னூர்,

குன்னூரில் போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராணுவ முகாம்

குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி(மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர்) என்று அழைக்கப்படும் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு, தென் மாநிலங்களைச்சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தில் சேர, தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி நிறைவு பெற்றதும், அந்த வீரர்கள் எல்லை பகுதியில் பணியாற்றுவதற்காக அங்கிருந்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு 2 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்வு கர்னல் லோக்தார்வார் நேரடி மேற்பார்யில் நடைபெற்றது.

போலீசில் ஒப்படைப்பு

தேர்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ஒட்டப்பந்தயம், உடற்தகுதி தேர்வுகள் முடிந்து, சான்றிதழ் சரிபார்க்கும்பணி நடைபெற்றது. இதில் 3 இளைஞர்கள் அளித்த சான்றிதழ்களில் வயது குளறுபடி இருந்தது. மேலும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என்று 2 பேர் அளித்த சான்றிதழ்களிலும் சந்தேகம் எழுந்தது. அவற்றை தீவிரமாக பரிசீலனை செய்த போது அந்த சான்றிதழ்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 5 இளைஞர்களையும், ராணுவ அதிகாரிகள் வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் 5 பேரிடம் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 23), சக்திவேல் (23), மணிகண்டன்(22) திருப்பதி (22) மோகன்(24) என்பது தெரியவந்தது.

கோவை சிறையில் அடைப்பு

அவர்கள் 5 பேர் மீதும் போலி சான்றிதழ்கள் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ராணுவத்தில் போலி சான்றிதழ் கொடுத்து சேர முயன்ற 5 பேரின் பின்னணியில் சதி கும்பல் ஈடுபட்டுள்ளதா? பணம் கைமாறி உள்ளதா? என்றும் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்