குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் உயர்தர கிரீன் டீ கிலோவுக்கு ரூ.600 நிர்ணயம் செய்யப்படும்
குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் உயர்தர கிரீன் டீ கிலோவுக்கு ரூ.600 நிர்ணயம் செய்யப்படும் தேயிலை வாரிய துணை இயக்குனர் தகவல்
கோத்தகிரி,
குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் உயர்தர கிரீன் டீ கிலோவிற்கு 600 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தேயிலை வாரிய துணை இயக்குனர் கூறினார்.
திறப்பு விழாகோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள கவுடகிரி வேளாண் அபிவிருத்தி கூட்டமைப்பின் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு எட்டூட் தலைவர் ஹாலா கவுடர் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் தலைவர் மனோகரன் அனைவரையும் வரவேற்றார். கூட்மைப்பின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், ருக்குமணி, மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் போஜன், கணபதி, கனரா வங்கி மேலாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரசாத் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உயர்தர கிரீன் டீநீலகிரியில் வாழும் ஒட்டுமொத்த சிறு, குறு விவசாயிகள் அவரவர் தோட்டத்தில் பறிக்கும் தேயிலையை தங்களது இல்லத்திலேயே குடிசை தொழிலகம் அமைத்து கையால் தயாரிக்கப்படும் உயர்தர கிரீன் டீயை உற்பத்தி செய்ய முன் வரவேண்டும். இதற்கான பயிற்சி வழங்கவும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இந்த கிரீன் டீயை விற்பனை செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அதற்கான தொகையை செலுத்தவும், இந்த கூட்டமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் இந்த உயர்தர கிரீன் டீ கிலோ ஒன்றுக்கு 600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் பொருளாளர் லட்சுமணன் நன்றி கூறினார். இதில் தேயிலை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.