மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் இறக்கும் அபாயம்

மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் இறக்கும் அபாயம் ஊட்டி ஏரியின் சுத்திகரிப்பு நிலைய இரும்பு தடுப்புகள் சரிசெய்யப்படுமா?;

Update: 2017-06-07 22:00 GMT

ஊட்டி,

ஊட்டி ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மீன்கள் இறக்கும் அபாயம் உள்ளது. ஆகவே அதற்கான சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு தடுப்புகள் சரிசெய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கோடப்பமந்து கால்வாய்

ஊட்டி கோடப்பமந்து பகுதியில் இருந்து ஊட்டி ஏரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் இருபுறத்திலும் ஒரு சில இடங்களில் உள்ள வீடுகள், குடியிருப்புகள், ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இந்த கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக சென்று ஊட்டி ஏரிக்கு செல்கிறது. மேலும் அருகே உள்ள குடியிருப்புகள், ஓட்டல்களில் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் கால்வாய்க்குள் வீசப்படுகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளும் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, சாப்பிட்ட பின்னர் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர். அதன் காரணமாக கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள், துணிகள், காய்கறி கழிவுகள் மற்றும் கட்டிடக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறது.

இதனால் கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கோடப்பமந்து விளைநிலங்களில் உள்ள மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு ஊட்டி ஏரியில் கலக்கிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஏரியில் மிதந்து கிடக்கிறது. அதன் காரணமாக ஊட்டி ஏரி தண்ணீர் மாசடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கோடப்பமந்து கால்வாய், ஊட்டி ஏரி தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கோடப்பமந்து கால்வாய் மற்றும் ஊட்டி ஏரி குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் சூழ்ந்து உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலக்காமல் இருப்பதற்காக ஊட்டி படகு இல்லம் அருகே நகராட்சி சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள இரும்பு தடுப்புகள் உடைந்தது. அதன் காரணமாக கால்வாயில் வரும் தண்ணீரில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஊட்டி ஏரியில் நேரடியாக கலந்துவிட்டன. இதனால் ஊட்டி ஏரியின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சியளிக்கிறது. மேலும் இரும்பு தடுப்பில் கழிவுகள் போய் அடைத்து கொள்வதால், கால்வாயில் வரும் தண்ணீர் படகு இல்ல சாலை வழியாக ரெயில்வே போலீஸ் நிலையம், ரெயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

மேலும் இரும்பு தடுப்பு பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். அவர்கள் தினமும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினாலும், அதன் அளவு குறைந்தபாடில்லை. கோடப்பமந்து கால்வாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. ஆனால் இந்த கால்வாயை தூர்வாறுவது வேளாண்மை பொறியியல் துறை ஆகும். ஊட்டி ஏரியை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் பராமரித்து வருகிறது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினரின் கையில் இருப்பதால், ஊட்டி ஏரியை சரியாக பராமரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த கால்வாயில் குப்பை மற்றும் திடக்கழிவுளை கொட்ட தடை விதிக்க நடவடிக்கை வேண்டும்.

மேலும் சாக்கடை கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதால், ஏரியில் உள்ள நீரில் ஆக்சிஜன் குவைதால் அங்குள்ள மீன்கள் இறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகள் ஊட்டி ஏரியில் கலக்காமல் இருக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள உடைந்த இரும்பு தடுப்புகளை சரிசெய்ய வேண்டும். மேலும் ஏதேனும் ஒரே துறையின் கட்டுப்பாட்டில் கால்வாய் மற்றும் ஊட்டி ஏரியை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்