பெண் கொலை வழக்கில் தங்கையின் கணவர் கைது
பெண் கொலை வழக்கில் தங்கையின் கணவர் கைது
செங்குன்றம்,
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜார்ஜ்கென்னடி (வயது 44). இவருடைய மனைவி ஸ்ரீதேவி (38). ஜார்ஜ்கென்னடிக்கும், அதே முகாமில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுஜி (36) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை ஸ்ரீதேவி தட்டிக்கேட்டதால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஜார்ஜ்கென்னடி, சுஜியை மாதவரம் மந்தைவெளி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அமர்த்தினார். இதுபற்றி தகவல் அறிந்து சென்னை வந்த ஸ்ரீதேவியின் சகோதரியான தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சனி (44), நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவியுடன் மாதவரம் மந்தைவெளிக்கு சென்று சுஜியிடம் கள்ளக்காதல் விவகாரம் குறித்து தட்டிக்கேட்டார்.
அப்போது அங்கு வந்த ஜார்ஜ்கென்னடி, ரஞ்சனியை கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சனி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ்கென்னடியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது மாதவரம் மேம்பாலம் அருகே வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற ஜார்ஜ்கென்னடியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.