கோவில்பட்டியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம்

கோவில்பட்டியில் தனியார் பஸ்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2017-06-07 19:45 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் தனியார் பஸ்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

வைகாசி விசாகத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி தனியார் பஸ் உரிமையாளர்கள், மினி பஸ் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கோவில்பட்டியில் நேற்று நடந்தது.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமை தாங்கினார். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, மினி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜகுரு, செயலாளர் சங்கரகோமதி, ராமசாமி, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் காளியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–

சாதி பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய...

தனியார் பஸ்கள், மினி பஸ்களில் சாதி சம்பந்தமான பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் எழுதாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் பஸ்களில் சாதி பிரச்சினை ஏற்படுத்தக் கூடிய பாடல்களை ஒலிபரப்ப கூடாது. பஸ்களில் பயணம் செய்யும் மாணவ– மாணவிகளுக்கு இடையே ஏற்படும் சிறிய பிரச்சினை என்றாலும், உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பள்ளிக்கூட நாட்களில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த காலை, மாலை நேரங்களில் பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற கூடாது. சரியான பஸ் நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி, போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் செய்யாமல், பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். பள்ளிக்கூட மாணவ– மாணவிகளை சரியான பஸ் நிறுத்தத்தில் ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். இவற்றை கடைபிடிக்குமாறு தனியார் பஸ், மினி பஸ் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்