மின்சாரம் தாக்கி மாணவர் பலி பிளஸ்–1 வகுப்புக்கு செல்ல இருந்த நிலையில் பரிதாபம்

கோடை விடுமுறைக்கு பிறகு பிளஸ்–1 வகுப்புக்கு செல்ல இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியானார்.

Update: 2017-06-07 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் பத்துகாணியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா, எலக்ட்ரீசியன். இவர், மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் பணிக்கு வந்த போது உறவினரின் மகனான கிங்ஸிலி (வயது 15) என்பவரையும் உதவிக்கு அழைத்து வந்தார். கிங்ஸிலி 10–ம் வகுப்பு முடித்து பிளஸ்–1 வகுப்பு செல்ல இருந்தார். கிங்ஸிலியும் எலக்ட்ரிக்கல் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் செல்லக்கூடிய ஒயரை எதிர்பாராதவிதமாக தொட்டதால் கிங்ஸிலியை மின்சாரம் தாக்கியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட கிங்ஸிலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோடைவிடுமுறைக்கு பிறகு பிளஸ்–1 வகுப்புக்கு செல்ல இருந்த நிலையில் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்