நெல்லையில் முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெல்லையில் முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2017-06-08 02:00 IST

நெல்லை,

நெல்லையில் முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழா

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு தங்க கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், சடாச்சர ஹோமம் வளர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி– அம்பாளுடன் மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலைகுமாரசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று காலையில் 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விசுவரூப தரிசனம் நடந்தது. காலை 5–30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு ருத்ரஏகாதசி ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் எடுத்து வரப்பட்டு, பகல் 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் சண்முகார்ச்சனையும், சுவாமி சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது.

முருகன் கோவில்களில்...

அதேபோல் நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடந்தது. நெல்லையப்பர் கோவில் ஆறுமுகர் சன்னதி, பாளையங்கோட்டை சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கடையம் அருகே உள்ள வாசுகிரிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்