உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது.;
திசையன்விளை,
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடல் மண் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
வைகாசி விசாக திருவிழாதென் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது.
அதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை ஆகியவை நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. விழாவையொட்டி திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வீதியுலாதொடர்ந்து இரவு சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மகரமீனுக்கு காட்சி கொடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.