ஆரணி பகுதியில் மணல் கிடைக்காததால் கட்டிட தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

ஆரணி, ஆதனூர், வடுகசாத்து, இரும்பேடு, இராட்டினமங்கலம், சேவூர் உள்பட பல கிராமங்களில் கட்டிடத் தொழிலாளர்கள் பலர் உள்ளனர்.

Update: 2017-06-07 21:00 GMT

ஆரணி,

ஆரணி, ஆதனூர், வடுகசாத்து, இரும்பேடு, இராட்டினமங்கலம், சேவூர் உள்பட பல கிராமங்களில் கட்டிடத் தொழிலாளர்கள் பலர் உள்ளனர். ஆரணியைச் சுற்றிலும் ஆற்றுப் பகுதிகளான காமக்கூர், தச்சூர், குண்ணத்தூர், மேல்சீசமங்கலம், விண்ணமங்கலம், மோட்டூர் ஆகிய கிராமங்களில் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் சேகரித்து மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும், டிராக்டர்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள்.

தற்போது தமிழக அரசு மணல் குவாரி அறிவிக்காத நிலையில் திருட்டுத்தனமாக மணல் கொண்டு வந்து சில இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மணல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிக விலையில் விற்றாலும் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வதாக கூறி லாரி, டிராக்டர்களை பறிமுதல் செய்து அதற்கான அபராத தொகை வசூலிப்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் கட்டிடத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதால், கட்டிடப் பணிகளுக்கு மணல் சரிவர கிடைப்பதில்லை. இதனால், பெரும்பாலானக் கட்டிடப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அரசு சார்பில் நடந்து வரும் கட்டிடப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டிடத்தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். மணல் குவாரி நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கட்டிடத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்