காளை மாடுகளை திருட முயன்றதாக தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்குதல்

காளை மாடுகளை திருட முயன்றதாக தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கிய 23 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தாய்–மகன் மீது தாக்குதல் புல்தானா மாவட்டம் ரியுகேட் மயன்பா கிராமத்தை சேர்ந்தவர் சக்காராம் உகாலே. இவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் ஏ

Update: 2017-06-06 21:57 GMT

மும்பை,

காளை மாடுகளை திருட முயன்றதாக தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கிய 23 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தாய்–மகன் மீது தாக்குதல்

புல்தானா மாவட்டம் ரியுகேட் மயன்பா கிராமத்தை சேர்ந்தவர் சக்காராம் உகாலே. இவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் ஏராளமான காளை மாடுகளை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இதே பகுதியை சேர்ந்த 50 வயது தலித் பெண்ணும், அவரது மகனும் சேர்ந்து தன்னுடைய மாட்டு கொட்டகைக்குள் புகுந்து, இரண்டு காளை மாடுகளை திருட முயன்றதாக சக்காராம் உகாலே கூச்சல் போட்டார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் சுமார் 30 பேர் திரண்டு வந்து, தலித் பெண்ணையும், அவரது மகனையும் சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த பெண்ணின் ஆடைகளை அகற்றி, அவரை நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து உதைத்தனர். இதனால், அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். பின்னர், அவர் மீட்கப்பட்டு உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

23 பேர் கைது

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. பாதிக்கப்பட்ட தலித் பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தாக்கிய 23 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும், சிலரை தேடிவருகிறார்கள்.

அதேசமயம், காளை மாடுகளை திருட முயன்றதாக அந்த பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாடுகளை திருட முயன்றதாக தலித் பெண்ணையும், அவரது மகனையும் கிராம மக்கள் கொலைவெறியுடன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்