பிரதான மார்க்கெட்டுகளில் பள்ளிக்கூட பொருட்கள் விற்பனை மும்முரம்

கோடை விடுமுறை முடிவதற்கு சில நாட்களே உள்ளதால் மும்பையில் உள்ள பிரதான மார்க்கெட்டுகளில் பள்ளிக்கூட பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

Update: 2017-06-06 22:30 GMT
மும்பை,

கோடை விடுமுறை முடிவதற்கு சில நாட்களே உள்ளதால் மும்பையில் உள்ள பிரதான மார்க்கெட்டுகளில் பள்ளிக்கூட பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கோடை விடுமுறை

மும்பையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 15-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் கோடை விடுமுறைக்காக வெளியூர்களுக்கு சென்று இருந்தவர்கள் மும்பை திரும்பி வர தொடங்கி உள்ளனர். எனவே மும்பையில் உள்ள பிரதான மார்க்கெட்டுகளில் பள்ளிக்கூட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

இதில் தாதர் மார்க்கெட் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை, தண்ணீர் பாட்டீல், எழுது பொருட்கள், ஷூ, பள்ளிச்சீருடை உள்ளிட்ட பொருட்களை ஆர்வமாக வாங்கினர்.

இதற்கு வசதியாக தாதர் பகுதியில் உள்ள கடைகளில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவைான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்து பெற்றோர்களும், குழந்தைகளும் தங்களுக்கு பிடித்த பொருட்களை தேர்வு செய்து மகிழ்ந்தனர். சில கடைகளில் பொருட்களை தேர்வு செய்வதில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே செல்ல சண்டைகளும் அரங்கேறின.

சூடுபிடிக்க தொடங்கியது

இதுகுறித்து தாதரில் புத்தகப்பை வியாபாரம் செய்து வரும் ஒருவர் கூறும்போது, “பள்ளி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் பள்ளிக்கூட பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகும் கூட பலர் புத்தகப்பை வாங்க வருவார்கள்.

இந்த ஆண்டு புதுப்புது டிசைன்களில் குழந்தைகளை கவரும் வகையில் புத்தகப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான புத்தகப்பைகள் ரூ.350-யில் தொடங்கி ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகின்றன” என்றார்.

விலை அதிகம்


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பள்ளி சீருடைகளின் விலை அதிகளவில் உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் கூறினர். இதேபோல அனைத்து பள்ளிக்கூட பொருட்களுமே 10 முதல் 25 சதவீதம் விலை அதிகரித்துள்ளன.

தாதர் தவிர கிராபர்டு மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சந்தை பகுதிகளிலும் நேற்று முதலே பொது மக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான பொருட்களை ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்